இலங்கைக்கும் துருக்கியிற்குமிடையிலான இரண்டாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்
இலங்கைக்கும் துருக்கியிற்குமிடையிலான இரண்டாவது சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைகின்றன
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும், துருக்கி குடியரசுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் கலந்தாய்வுகள், கடந்த 05 ஆம் திகதி (05.05.2026)
அங்காராவில் உள்ள துருக்கியின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நடைபெற்றது .

இக்கலந்தாய்வுகளுக்கு, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்னவும், துருக்கி குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தெற்காசியப் பணிப்பாளர் நாயகமும், தூதுவருமான சிஹாத் எர்கினேவும் இணை தலைமை தாங்கினர்.
இக்கலந்தாய்வுகள், இலங்கைக்கும் துருக்கியிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகளில் குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றன. மேலும், பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட ஈடுபாட்டையும் இது பிரதிபலிக்கிறது. இருதரப்பு உறவுகளின் வலுவான வரலாற்று அடித்தளங்களின் மீது, முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைக் கண்டறியவும், வழக்கமான அரசியல் உரையாடலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
கலந்தாய்வுகளின் போது, இரு தூதுக்குழுக்களும் இருதரப்பு அரசியல் உறவுகள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இணைப்பு மற்றும் கடல்சார் விவகாரங்கள், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிராந்திய மற்றும் பல்தரப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கிய விரிவானதும், தொலைநோக்குடைய கண்ணோட்டத்தைக்கொண்டதுமான பயனுறுதிப்பாடுடைய ஆலோசனைகளில் ஈடுபட்டன. குறிப்பாக மருந்துப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுலா, ஏற்பாட்டியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.

தித்வா புயலைத்தொடர்ந்து, துருக்கி அரசாங்கம் வழங்கிய மனிதாபிமான உதவிக்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முயற்சிகளில் மேலும் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தையும் இக்கலந்துரையாடல்கள் குறிப்பிட்டன; மேலும், நிறுவன ரீதியான இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும், திறன்சார் அபிவிருத்தி முயற்சிகளுக்குமான தமது தீவிர ஈடுபாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
இஸ்தான்புல் மற்றும் கொழும்புக்கு இடையே தற்போதுள்ள நேரடி விமான இணைப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் சேவைகள் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை ஆராய்தல் உள்ளிட்ட இணைப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஆலோசனைகள் மேலும் கவனம் செலுத்தின. நிலுவையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவில் இறுதி செய்வது உட்பட, உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

மேற்கு ஆசியா, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உட்பட, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இரு தூதுக்குழுக்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டன. மேலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற பல்தரப்பு மன்றங்களில் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின. ஐக்கியாநாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் கோட்பாடுகளைத் தாங்கள் கடைப்பிடிப்பதாக இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

நிலைபேறான அபிவிருத்தி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர செழிப்பு ஆகிய பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இருதரப்பு உறவுகளை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கான இரு தரப்பினரின் வலுவான அரசியல் உறுதிப்பாட்டின் வெற்றிகரமான பெறுபேற்றை இவ்விரண்டாம் சுற்று அரசியல் கலந்தாலோசனைகளின் கூட்டமானது செவ்வனே பிரதிபலிக்கிறது.
இலங்கைத் தூதுக்குழுவில், துருக்கி குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் நிலூக்க கதுருகமுவ, தூரத்தின் உயர் அதிகாரி நிலுஷா தில்மினி மற்றும் வர்த்தகத்திற்கான முதலாவது செயலாளர் திலங்கா ஹெட்டியாராச்சி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தப் பயணத்தின் போது, பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன, தித்வா புயலுக்குப் பிந்தைய இலங்கைக்கான உதவிகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக துருக்கியேயின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிக்கான பணிப்பாளர் நாயகம் கோர்ஹான் கரகோச் மற்றும் துருக்கியே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகமையின் (TİKA) துணைத் தலைவர் கலாநிதி அலி எர்கான் ஆகியோரையும் சந்தித்தார்.
