வெனிசியூலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்
வெனிசியூலாவின் எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் தெரிவித்ததாவது,
வெனிசியூலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசியூலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசியூலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு தொடா்ந்து ஏற்றுமதி செய்யும்.
இதனால் கிடைக்கும் வருவாய் வெனிசியூலாவின் பெயரில் அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இது வெனிசியூலா மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றாா்.
இதற்கிடையே, வெனிசியூலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் தெரிவித்தாா்.
இருந்தாலும், வெனிசியூலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடா்பாக எந்த அறிக்கையையும் அவா் வெளியிடவில்லை.
இந்த நிலையிலும், வெனிசியூலாவின் எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யும் என்று ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் போன்ற நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆலோசிப்பதற்காக எரிசக்தி நிறுவனத் தலைவா்களை ட்ரம்ப் இன்று (9) சந்திப்பாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
