16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அவுஸ்திரேலிய அரசு தடை
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை டிசம்பர் 10ஆம் திகதி முதல் நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அவுஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிசம்பர் 10ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வருகிறது.
இதனைப் பின்பற்றாத முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்னாப்சாட், த்ரெட், டிக்டொக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு டிசம்பர் 10ஆம் திகதி முதல் 33 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
முடக்கப்பட்ட கணக்குகளின் விவரங்கள் குறித்து டிசம்பர் 11 ஆம் திகதி இந்த 10 சமூக ஊடக நிறுவனங்களிடம் அறிக்கை மூலம் தரவுகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி அடுத்த 6 மாதங்களுக்கு மாதாமாதம் அறிக்கை மூலம் தரவுகள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அவுஸ்திரேலிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் கூறுகையில் ,
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயது உறுதிப்பாட்டை நியாயமாகவும் துல்லியமாகவும் அறிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்பதை அரசு ஆமோதிக்கிறது.
எனினும், சட்டத்திற்கு புறம்பாக சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது கண்டறியப்பட்டால் அதற்கான அபராதத்தை அவர்கள் சந்திக்க நேரிடும். தொடர்ந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அதிகபட்ச தொகையை அபராதமாக நீதிமன்றமே விதிக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து எந்தநேரத்திலும் வெளியேறலாம் என கூகுள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சமூக ஊடகங்களில் புதிய கணக்கை உருவாக்குவோரின் வயதை சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களிடம் அவுஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சட்டத்தை பின்பற்றி, பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ருமேனியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
