ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு: “உண்மையான குற்றவாளிகளை மறைக்கிறதா அரசு?” – சமல் சஞ்சீவ கேள்வி
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கான முயற்சியா இது? என்ற சந்தேகம் எழுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (03) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக செயற்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஆரம்பம் முதலான தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கு மட்டும் தண்டனை வழங்கிவிட்டு, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைத் தப்பிக்கச் செய்வதற்கான முயற்சி இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னைய விசாரணை அறிக்கைகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில உயர் அதிகாரிகளிடமே தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது, விசாரணைகளின் நடுநிலைத் தன்மை தொடர்பில் கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதித்துறை அரசியலுக்காக பயன்படுத்தப்படக்கூடாது
அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினரும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் அண்மைய நீதிமன்றத் தீர்ப்புகளை முன்வைத்து பிரதம நீதியரசரின் பதவிக்கால நீடிப்பை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் சமல் சஞ்சீவ குற்றஞ்சாட்டினார்.
சட்டத்தையும் நீதித்துறையையும் அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவோ பயன்படுத்தக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
சட்ட வரம்புகளை மீறி அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திய ஆட்சியாளர்களை மக்கள் வரலாற்றில் தூக்கியெறிந்துள்ளதை தற்போதைய அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் கடும் நெரிசல்
இதனிடையே, நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பு தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார்.
15,000 முதல் 20,000 கைதிகளை மட்டுமே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 40,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறையில் உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் வழக்கு விசாரணை நிறைவடையாத சந்தேகநபர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தண்டனை பெற்றவர்களில் சுமார் 67 சதவீதமானோர் சிறியளவிலான அபராதத் தொகையைக்கூட செலுத்த முடியாத காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
எனவே, நீதித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் குறிப்பிட்ட பதவிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குப் பதிலாக, சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் வழக்குகளை தாமதமின்றி முடிப்பதற்கும் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய நீதி அமைச்சர் சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் நீதித்துறை நிர்வாகம் ஆகிய இரு துறைகளிலும் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.



