🦟 87 ஆயிரத்தை நெருங்கிய டெங்கு பாதிப்பு – 62 பேர் உயிரிழப்பு!
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (03) வரையான தரவுகளின்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,947 ஆக அதிகரித்துள்ளது.
📈 ஓகஸ்டில் மட்டும் 1,598 பேர் பாதிப்பு
ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகி சில நாட்களே கடந்துள்ள நிலையில், இதுவரை 1,598 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔴 கம்பஹாவில் அதிக பாதிப்பு
மாவட்ட ரீதியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் பதிவான மொத்த நோயாளர்களில் 21.24 சதவீதம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும்.
அதேவேளை,
- கொழும்பு – 17,187 நோயாளர்கள்
- கண்டி – 6,082 நோயாளர்கள்
என்ற அடிப்படையில் பாதிப்பு பதிவாகியுள்ளது.
⚠️ 62 டெங்கு மரணங்கள்
இந்நிலையில், இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 62 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு மரண விகிதம் தற்போது 0.07 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மழையுடனான காலநிலை தொடரும் நிலையில், டெங்கு பரவக்கூடிய இடங்களை அழித்து, நுளம்பு பெருக்கத்தைத் தடுப்பதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



