500 சொகுசு வாகனங்கள்… பல கோடி ரூபா வரி ஏய்ப்பு… பின்னணியில் யார்?
பல கோடி ரூபா சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 அதிநவீன சொகுசு வாகனங்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த வாகனங்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு சில ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சுங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் எனவும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சில அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் எனவும் விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான சொகுசு வாகனங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ள வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டவிரோத வாகனப் பதிவுகளில் பெரும்பாலானவை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின்போது, இரகசியமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சோதனைகளின்போது மேலும் சுமார் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்களும் கண்டறியப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



