நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதா? – அரசுக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கடும் எச்சரிக்கை!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் வகையில் அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) கடும் கவலை வெளியிட்டுள்ளது.
தன்னிச்சையான முடிவுகள் அல்லது அவசர நடவடிக்கைகளின் அடிப்படையில் நீதித்துறை தொடர்பான இத்தகைய முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1953ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், தற்போது இத்தாலியின் ரோமை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையானதும் மிகப்பெரியதுமான சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
நீதிபதிகளின் பதவிக்காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது தொடர்பான மாற்றங்கள் தெளிவான கொள்கைகள், நியாயமான காரணங்கள் மற்றும் வலுவான அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு ஏற்கனவே எதிர்ப்பையும் கவலையையும் வெளியிட்டுள்ளன.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றும் சட்டமூலம் முறையானதும், கொள்கை அடிப்படையிலானதுமான அரசியலமைப்புத் திருத்த நடைமுறையின் ஊடாகவே கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச நீதிபதிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இல்லையெனில், இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ள சங்கம், குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.



