புதிதாகத் துறவறம் பூண்ட சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, பௌத்த தேரர் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி, குறித்த தேரருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுவன் வழங்கிய சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் உண்மையானதாகவும் காணப்பட்டதால், அதன் அடிப்படையில் விசாரணை நீதிபதி தீர்ப்பளித்ததில் தவறில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், குறுக்கு விசாரணையின்போது வெளிப்பட்ட சிறிய முரண்பாடுகள், பிரதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
2014 நவம்பர் 23ஆம் திகதி முதல் 2015 ஜனவரி 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், பொலன்னறுவையிலுள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த ஏழு வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த தேரருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 100,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.



