
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்காவிட்டால், வேறு ஜனாதிபதியை நியமித்தேனும் கோரிக்கையை நிறைவேற்றுவோம் – பலாங்கொடை கஸ்ஸப பிக்கு
ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், வேறு ஜனாதிபதியை நியமித்தேனும் தமது கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வோம் என பலாங்கொடை கஸ்ஸப பிக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப பிக்கு, நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பின்னர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தாங்கள் கூற விரும்புவது, அவரது ஜனாதிபதி பதவியைப் பறிப்பதற்கோ அல்லது அமைச்சரவையைக் கலைப்பதற்கோ தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதே எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தமது நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையையும் 34(1) ஆவது உறுப்புரையையும் இணைத்துப் பார்க்கும்போது, அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது என பலாங்கொடை கஸ்ஸப பிக்கு தெரிவித்துள்ளார்.
சிறைவாசம் அனுபவித்த தேரர்கள் என்ற வகையில், சிறையில் ஞானசார தேரர் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் தனது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசவில்லை என்றும், நாடு, இனம் மற்றும் பௌத்த சாசனம் தொடர்பாகவே அவர் கருத்துக்களை முன்வைத்ததாகவும் கஸ்ஸப பிக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைச்சாலையில் தேரர்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் மற்றும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தங்களைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக வந்தவர்களாகக் கருதுவதாகத் தெரிவித்த அவர், தங்களது உண்மையான நோக்கம் ஞானசார தேரருக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதே என வலியுறுத்தியுள்ளார்.



