ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்ட செய்தி வெளியாகிய நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சமூக ஊடகப் பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, சரத் பொன்சேகா தனது மனைவி அனோமா பொன்சேகாவின் புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் சாதாரண பதிவு அல்ல என்பதே பலரது கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.
2010ஆம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவை சந்திக்க அவரது மனைவி அனோமா பொன்சேகா சிறைக்கு சென்றிருந்த தருணத்தின் புகைப்படமே தற்போது பகிரப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா, 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரே விடுதலையானார்.
அந்த காலகட்டத்தில் தனது கணவரின் விடுதலைக்காக அனோமா பொன்சேகா தொடர்ச்சியாக போராடியிருந்தார்.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்ட செய்திக்கு மத்தியில், அந்தப் பழைய புகைப்படத்தை வெளியிட்ட சரத் பொன்சேகா, “விளக்கவுரை தேவையில்லை” என்ற குறுகிய குறிப்பை மாத்திரம் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பலரும், இந்தப் பதிவை கடந்த கால அரசியல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, “காலம் பதில் சொல்லும்”, “கர்மாவை யாராலும் வெல்ல முடியாது” போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன.



