2028 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை – ஜே.டி. வான்ஸ்
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விருப்பம்; மனைவி உஷாவுக்கும் அரசியலில் அதிக ஆர்வமில்லை எனத் தெரிவிப்பு!
அமெரிக்காவின் 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தில் CBS News ஊடகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2028ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தான் தாமதம் செய்பவர் என்றும், இந்த விடயம் குறித்துத் தொடர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு நான்கு சிறிய குழந்தைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும் குடும்பத்திற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதும் தனது முடிவில் முக்கியமான அம்சங்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மனைவி உஷா வான்ஸுக்கு அரசியலில் அதிக ஆர்வம் இல்லையென்றாலும், பொதுச் சேவையில் ஈடுபடுவதில் ஆர்வம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் வாரிசாக ஜே.டி. வான்ஸை அடையாளப்படுத்தியுள்ள நிலையில், 2028ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்பது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னர், 2026ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் மனைவி உஷாவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வான்ஸ் தெரிவித்திருந்தார்.
எனினும், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அவரது இறுதி முடிவு குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது.



