
நாமல் – யோசித தொடர்பில் மேலும் ஒரு சர்ச்சை; துறைமுகத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்ட கொள்கலன்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘தாருனயன்ட்ட ஹெட்டக்’ அமைப்பின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நன்கொடைப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், உரிய பரிசோதனைகளின்றி துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த ஊடகவியலாளர் லசந்த ரூஹுனகே எழுதியுள்ள ‘Rajapaksha Company’ என்ற நூலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ‘தாருனயன்ட்ட ஹெட்டக்’ அமைப்பின் பதிவு செய்யப்பட்ட முகவரியாக அப்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை குறிப்பிடப்பட்டிருந்ததாக நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவராக நாமல் ராஜபக்சவும், உப தலைவராக யோசித ராஜபக்சவும் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘Youth TV’ உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கும் இந்த அமைப்புக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட வசதிகள் காணப்பட்டதாக நூலில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைப்பின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சில கொள்கலன்கள் வழக்கமான பரிசோதனை நடைமுறைகளின்றி துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொள்கலன்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றை ரகசியமாக வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள் குறித்து 2010 ஜனவரி 17 மற்றும் 24ஆம் திகதிகளில் வெளியான சிங்கள ஊடகக் கட்டுரைகளும் ‘Rajapaksha Company’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



