ஷிரான் பாசிக்கிடம் நிதி உதவி பெற்ற ஆசிரியர் குறித்து அதிர்ச்சி தகவல் – இன்டர்போல் உதவியை நாடும் பொலிஸார்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஷிரான் பாசிக்கிடம் நிதி உதவி பெற்றதாக தெரிவிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சைக்கு முன்னதாக கசியவிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த ஆசிரியர் தற்போது டுபாயில் வசித்து வருவதாக பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவியைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு (Red Notice) பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படும் அவரது மகன் மற்றும் மனைவியிடமும் விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஷிரான் பாசிக்கின் நிதி தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் செயற்பாடுகள் குறித்து மேலதிக தகவல்களைத் திரட்ட பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.



