மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, வெலிக்கடை சிறைச்சாலையில் தனது பெரும்பாலான நேரத்தை தியானத்தில் செலவிட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை வளாகத்தில் அவர் அடிக்கடி ‘சக்மன் பாவனா’ எனப்படும் நடை தியானத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காலை நேரங்களில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, வழக்கமாக புன்னகையுடன் “காலை வணக்கம்” தெரிவித்து அவர்களை வாழ்த்துவதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இதேவேளை, சிறையில் இருக்கும் காலத்தில் இருவருக்கும் புத்தகங்களை வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



