சிறுமி ஒருவரை துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாக தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி முன்னதாக வழங்கிய வாக்குமூலத்தில் இடம்பெற்ற சில தகவல்களை இந்த DNA பரிசோதனை முடிவு விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவும் விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த இடத்திற்கு சிறுமியைத் தவிர வேறு பெண்களும் வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் விசாரணை தரப்பில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில், சிறுமியின் ஆடைகளில் எந்தவிதமான உயிரியல் மாதிரிகளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளதாக கூறப்படும் DNA அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறக்கூடும் என சட்டத்துறை வட்டாரங்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக அழைத்து வரப்படுவது தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



