ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க லண்டன் பயணம் மேற்கொண்டபோது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ள புதிய தகவல்கள் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய தகவல்களுக்கு பதிலளித்த பிரித்தானிய அதிகாரிகள், 2023 செப்டம்பர் மாதத்தில் அரசாங்க அழைப்பின் பேரில் பிரித்தானியாவுக்கு சென்ற இராஜதந்திரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட பட்டியலில் அரச அனுசரணையுடன் நடைபெற்ற State Visit மற்றும் Guest of Government Visit வகை விஜயங்களில் பங்கேற்ற தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அதில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால், குறித்த லண்டன் பயணம் உண்மையில் எந்த வகை விஜயமாகக் கருதப்பட வேண்டும், அதற்கான செலவுகளை யார் ஏற்றுக்கொண்டனர் என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. இதன் காரணமாக வழக்கு விசாரணையில் புதிய சர்ச்சைகளும் முக்கிய வெளிப்பாடுகளும் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.



