இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகள் ஊடாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் மூலம் கைது செய்யப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சில முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின்போது, அவர்களின் பணப்பரிமாற்றங்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெருமளவிலான பணம் சில வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட விதம் தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
பொதுவாக வங்கிக் கணக்கொன்றில் மிகப்பெரிய தொகை பணம் பரிமாற்றம் செய்யப்படும் போது, அந்தப் பணத்தின் மூலமும் பரிமாற்றத்திற்கான காரணமும் தொடர்பான தகவல்கள் கோரப்படுவது வழக்கம். எனினும், குறித்த சந்தேகநபர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சில வங்கி அதிகாரிகள் திட்டமிட்ட வகையில் உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் CID விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணப்பரிமாற்றங்களுக்கு சில வங்கி அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சில முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இத்தகைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று தனியார் வங்கிகளில் CID அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு, சில முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அடுத்ததாக எந்த வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு வங்கித்துறையில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



