Wednesday, July 29, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

எபோலா வைரஸ் தொற்று அற்ற நாடாக உகண்டா தன்னை அறிவித்தது.

newsbar

கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் அண்மையில் பரவிய எபோலா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, நாடு எபோலா அற்ற நாடாக மாறியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிறிஸ் பாரியோமுன்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மே மாத நடுப்பகுதியில் பரவத் தொடங்கிய இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரில், 15 பேர் அயல் நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து தொற்றுடன் உகண்டாவுக்குள் வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் சிகிச்சைக்குப் பின்னர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், உயிரிழந்த இருவரும் கொங்கோவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவில் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், எபோலா பரவலின் மையமாக விளங்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதலின்படி, எபோலா பாதிப்பிலிருந்து கடைசி நோயாளி குணமடைந்த பின்னர் 42 நாட்கள் புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாமல் இருக்க வேண்டும்.

உகண்டாவில் உள்ளூரில் தொற்றுக்குள்ளான கடைசி நோயாளி கடந்த ஜூன் 16 ஆம் திகதி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 42 நாட்கள் தொடர்ச்சியாக புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாததால், நாடு எபோலா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் பலமுறை எபோலா தொற்றலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவம் உகண்டாவுக்கு இருப்பதால், இத்தகைய தொற்றுகளை விரைவாகக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப மற்றும் சுகாதார நிபுணத்துவத்தை அந்நாடு பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பழங்களை உண்ணும் வௌவால்கள் அதிகம் வாழும் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் உகண்டாவில் காணப்படுவதால், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இத்தகைய வைரஸ் தொற்றுகள் பரவும் அபாயம் தொடர்ந்து நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை