அர்ச்சுனா எம்.பி.க்கு பிடியாணை: நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு – சிறப்புரிமை விவகாரத்தில் எதிர்க்கட்சி எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை இன்று (24) நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி. கலந்துகொண்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பது தொடர்பாக சபையில் விவாதம் எழுந்தது.
இதன்போது உரையாற்றிய அர்ச்சுனா இராமநாதன், இன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறுவதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, இது தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதைக் காட்டுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தில் அமர்வில் பங்கேற்று கொண்டிருக்கும்போது, அவரைக் கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால், நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவிற்கு சபையில் பங்கேற்பது ஒரு அடிப்படை சிறப்புரிமை என்றும், அந்த உரிமையை எந்த நிறுவனமும் தடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சட்டநடவடிக்கைகள் தொடர்பில் தேவையானபோது நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய கடமை இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேசிங்க, இது அர்ச்சுனாவுக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல; அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையுடனும் தொடர்புடைய பொதுவான விடயம் என்பதால், நாடாளுமன்றம் இதுகுறித்து ஒருமித்த தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, உடனடியாக எந்தத் தீர்ப்பையும் வழங்க முடியாது என்றும், விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய கவனம் செலுத்தும் என உறுதியளித்தார்.



