முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றுகூடல் ஆரம்பக்கட்டம் மட்டுமே என்றும், அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7-இல் அமைந்துள்ள தனது அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 11 இலட்சம் நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, திங்கட்கிழமை பௌத்த பிக்குகளின் மாநாடும், புதன்கிழமை சட்டத்தரணிகளின் மாநாடும் நடைபெறவுள்ள நிலையில், அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளே எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணையச் செய்துள்ளதாக கூறிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் காரணமாக சட்டத்தரணிகள் மத்தியிலும் ஒன்றிணைய வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கூட இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடனான அரசாங்கத்தின் முரண்பாடுகள், எதிர்க்கட்சியின் அரசியல் பலத்தை மேலும் வலுப்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



