18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எங்கள் அரசின் மிகப்பெரிய தவறு – நாமல் ராஜபக்ச ஒப்புதல்
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது தங்களது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30.07 ) முன்னிலையான பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் போட்டியிடும் வகையில் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் அது தவறான முடிவு என்பதை தாங்கள் உணர்ந்ததாகவும் கூறினார்.
மேலும், கடந்த காலத்தில் நிகழ்ந்த அந்தப் பிழையிலிருந்து தங்களது கட்சி பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தனிநபர்களை மையமாகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த அவர், ஆட்சி மாறினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றன என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அதேவேளை, இலங்கை பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறிய நாமல் ராஜபக்ச, அவர்கள் அரசியல் செல்வாக்கின் கீழ் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
தற்போது முன்வைக்கப்படும் அரசியலமைப்புத் திருத்தம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காகவே கொண்டு வரப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். தனிநபர்களை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பை மாற்றும் நடைமுறை நாட்டுக்கு நல்ல முன்னுதாரணமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 19 மற்றும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களும் தனிநபர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கமும் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.



