பதுளை மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
பதுளை மாவட்டம், அழகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2026 செப்டெம்பர் 29ஆம் திகதி நடைபெற்றது. கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி சரண்யா வி. எஸ்., இலங்கையின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ பிரதீப் சுந்தரலிங்கம் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டினர்.
இந்த 51 வீடுகளும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (IHP) நான்காம் கட்டத்தின் இரண்டாம் நிலையத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2025 ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நான்காம் கட்டத்தின் கீழ், இலங்கையின் ஆறு மாகாணங்களில் பெருந்தோட்ட சமூகத்தினருக்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான முக்கிய அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக, 18 பில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான மானிய உதவியுடன் சுமார் 60,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட அல்லது புனரமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
இந்திய வம்சாவளித் தமிழ் சமூகமும் பெருந்தோட்டப் பகுதிகளும், இலங்கைக்கான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
வீடமைப்புக்கு அப்பால், டிக்கோயாவில் பல்துறை சிறப்பு வைத்தியசாலை நிர்மாணிப்பு, ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்தல், ஒன்பது பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் சீதா எலிய ஆலயத்தின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 2023 ஜூலை மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் 750 மில்லியன் இந்திய ரூபாய் பெறுமதியான பல்துறை அபிவிருத்தித் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அழகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.




