இந்தியாவின் இரண்டு வர்த்தகத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் – கேரளா – இலங்கை வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இந்தியாவின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (CCCI) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு வர்த்தகத் தூதுக்குழுக்கள், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் 2026 ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இல் பங்கேற்பதற்காக கொழும்புக்கு விஜயம் செய்தன.
இந்த விஜயங்கள் மூலம் இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
2. சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள், சூரியசக்தி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித்துறை மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் (CII) தூதுக்குழு, இலங்கையின் முக்கிய தரப்பினர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியது.
இதன்போது, எரிசக்தி அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க, இலங்கை முதலீட்டுச் சபை (BOI) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்திக்கப்பட்டனர்.
இந்தச் சந்திப்புகளின்போது, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தகத்துக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
3. சுகாதாரம், தளவாடச் சேவைகள், கட்டுமானப் பொருட்கள், வர்த்தக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (CCCI) தூதுக்குழுவும் இலங்கையின் முக்கிய தரப்பினர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியது.
இத்தூதுக்குழு, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்தது.
மேலும், இலங்கை நிறுவனங்களுடன் நேரடி வர்த்தகச் சந்திப்புகளிலும் (B2B) பங்கேற்று, சாத்தியமான வர்த்தகக் கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் கைத்தொழில் உற்பத்திச் செயற்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் நெஸ்லே (Nestlé) மற்றும் எலிபன்ட் ஹவுஸ் (Elephant House) ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களுக்கும் தூதுக்குழு விஜயம் செய்தது.
4. இரண்டு தூதுக்குழுக்களும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களையும் சந்தித்தன.
இதன்போது, இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையில் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்குக் காணப்படும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து உயர்ஸ்தானிகர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை வர்த்தக நிறுவனங்களுடனான தொடர்புகளை மேலும் ஆழப்படுத்தவும், வர்த்தகக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராயவும் அவர் இந்திய நிறுவனங்களை ஊக்குவித்தார்.
5. கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் இந்த விஜயம், பிராந்திய மற்றும் மாநில அளவில் இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அவற்றின் இலங்கைப் பங்காளிகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இதேவேளை, தென் குஜராத் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (SGCCI), இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் (ICC) ஆகியவற்றின் வர்த்தகத் தூதுக்குழுக்களும் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6. இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாடு 2026 இன் பக்க நிகழ்வாக, கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
கேரளாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
கொச்சி வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான திரு. சி. எஸ். கார்த்தா மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. கிரிஷான் பாலேந்திர ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
வணிகத் தொடர்புகளை மேம்படுத்துதல், நெருக்கமான வர்த்தக உறவுகளை உருவாக்குதல் மற்றும் இருதரப்புக்கும் பயனளிக்கும் வர்த்தக வாய்ப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. இந்தியாவின் இரண்டு வர்த்தகத் தூதுக்குழுக்களின் இலங்கை விஜயங்கள், நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வர்த்தகத் தொடர்புகள் மற்றும் நிறுவன ரீதியான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா – இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.




