நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியின் கருத்துக்களே வெற்றி – முஜிபுர் ரஹ்மான்
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசாங்கம் நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்திருக்கலாம். ஆனால், பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி முன்வைத்த உண்மைகள் வெற்றியடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கிலேயே இந்தப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு 159 உறுப்பினர்களின் ஆதரவும், எதிர்க்கட்சிக்கு 80 உறுப்பினர்களின் ஆதரவும் உள்ள நிலையில், வாக்கெடுப்பின் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், விவாதத்தின் போது எதிர்க்கட்சி முன்வைத்த கேள்விகளுக்கும் ஆதாரங்களுக்கும் ஆளுங்கட்சியினரால் உரிய பதில் வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது நீதி அமைச்சரின் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறைக்க முயற்சிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.
மேலும், விவாதத்தின் போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நேரடியான பதில்களை வழங்காமல் தொடர்பற்ற விடயங்களை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கடந்த காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதும், அப்போதைய அரசாங்கம் அவரை பாதுகாத்ததாகவும், பின்னர் அவர் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து சிறைக்கு செல்ல நேர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது அதே தவறை மீண்டும் செய்கிறது. இது அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்” என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.



