கம்பஹா கல்வி வலயத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் ஊடகக் கழக மாணவர்கள் மத்தியில் அறிவிப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் “Raise Your Voice” செயலமர்வு சியனே ஊடக வட்டத்தின் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் நேற்றைய தினம் (19) கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் மண்டபத்தில் இடம்பெற்றது.
சியனே ஊடக வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் அஹமட் நஸீர், வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் ஹஷ்மா ஸபீன், விஷேட அதிதியாக கல்வியலாளர் டில்ஷான் நளீம், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பஸ்ஹான் நவாஸ் (SLBC), பியாஸ் மொஹமட், உதயம் பத்திரிகையின் ஆசிரியர் சிராஜ் எம். ஸாஜஹான், அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ்.ஏ.எம்.பவாஸ் மற்றும் எழுத்தாளர் பயாஸா பாஸில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பஸ்ஹான் நவாஸ், அஹ்மத் நஸீர் மற்றும் இளம் ஊடகவியலாளர் ஹஷ்மா ஸபீன் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இச்செயலமர்வில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம், உடுகொடை அரபா மகா வித்தியாலயம் மற்றும் பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை விஷேட அம்சமாகும்.
செயலமர்வின் இறுதியில், பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




