அழிவின் விளிம்பில் பாரம்பரியக் கலைகள்! அவற்றை மீட்டெடுக்கும் கிழக்கின் கலைச் சங்கமம்
நிகழ்வுகள் கோலாகலம்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், நகரமயமாக்கலின் வேகமும் மனித வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. எனினும், நமது பண்பாட்டு அடையாளங்களாகவும், பாரம்பரியத்தின் ஆணிவேர்களாகவும் திகழும் கலைகளும் கலாசார விழுமியங்களும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.
மனித மனங்களை ஒருமைப்படுத்தி, ஆன்மாவிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கிய பாரம்பரியக் கலைகள் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இக்கலைகள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்ல; அவை நமது முன்னோர்களின் வாழ்வியல் தத்துவங்கள், ஒழுக்க நெறிகள் மற்றும் சமூகப் பண்பாடுகளைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்த அரிய பொக்கிஷங்களாகும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தாக்கமும், மாறிவரும் கலை ரசனைகளும் பாரம்பரியக் கலைகளுக்கான வாய்ப்புகளையும் மேடைகளையும் சுருக்கியுள்ள நிலையில், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
இத்தகைய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஏறாவூர் நகரப் பிரதேச செயலகம் , காத்தான்குடி பிரதேச செயலகம் , கோறளைப்பற்று மத்தி வாழைசேனை . கோறளைப்பற்று மேற்று ஓட்டமாவடி
ஆகியவற்றின் பங்களிப்புடன் ‘கிழக்கின் கலைச் சங்கமம்’ எனும் மாபெரும் கலாசார, பண்பாட்டு விழா நடைபெற்று வருகின்றது.
ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஏறாவூர் கோல்டன் அவென்யூ மண்டபத்தில் இடம்பெறும் இவ்விழாவில், பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள், பட்டிமன்றங்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று (17.10.2026), பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கவர்ந்ததுடன், கிழக்கின் கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிப்படுத்தும் சிறப்பான களமாகவும் இவ்விழா அமைந்தது.
விழாவின் இறுதி நாளான இன்று (18.10.2026) மேலும் பல சிறப்பு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மறைந்து வரும் பாரம்பரியக் கலைகளுக்கு மீண்டும் உயிரூட்டுவதுடன், இளம் தலைமுறையினரிடையே கலை மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள், நமது பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமான முன்னெடுப்புகளாக அமைகின்றன.
கலைகளைப் பாதுகாப்போம்; கலாசாரத்தைத் தலைமுறைகள் கடந்து கொண்டு செல்வோம்!




