இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
19 ஈரானிய கப்பல்களுக்கு உதவினால் இரண்டாம் நிலைத் தடைகள்?
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீரின்றி சிக்கித் தவிக்கும் 19 ஈரானிய கப்பல்களுக்கு உதவி வழங்கினால், இலங்கைக்கு எதிராக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த கப்பல்களுக்கு தேவையான விநியோகங்களை வழங்குவது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதல்ல என சில கப்பல்களுக்கு துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மூன்று நாள் பயிற்சிப் பட்டறையொன்றை அமெரிக்கத் தூதரகம் நடத்தியுள்ளது.
இந்தப் பயிற்சியில், அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு கடல்சார் முகவர்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட எந்தவொரு சேவை வழங்குநரும் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தகைய உதவிகள் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி இலங்கையும் அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் Wall Street Journal தெரிவித்துள்ளது.




