சவுதியின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகள் முழு ஆதரவு!
சவுதி அரேபியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆறு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், குவைத், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் 168ஆவது அமர்வில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சரும், கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவருமான கலாநிதி அப்துல்லத்தீஃப் அல்-ஜயானி தலைமை தாங்கினார்.
இதன்போது உரையாற்றிய அவர், வளைகுடா நாடுகளில் ஒன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் பாதுகாப்புக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு என்பது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் ஒட்டுமொத்த பாதுகாப்புடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களை இலக்காகக் கொண்டு ஹூதி அமைப்பினர் முன்னெடுப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இக்கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், தளவாட இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மூலோபாய இருப்புகளைப் பராமரிப்பதில் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
இத்தகைய நடவடிக்கைகள் வளைகுடா பிராந்தியத்தின் பொருளாதார வலிமையை அதிகரிப்பதுடன், நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் மேம்படுத்தும் எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலை மற்றும் அரேபிய வளைகுடா, செங்கடல் ஆகிய கடற்பகுதிகளில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் அமைச்சர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.



