தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆரம்பம்!
உலக டெஸ்ட் சாம்பியன்களுக்கு எதிராக களமிறங்கும் அவுஸ்திரேலியா!
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (09.10.2026) டர்பனில் ஆரம்பமாகிறது. கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தென்னாபிரிக்க அணிக்கு டெம்பா பவுமாவும், அவுஸ்திரேலிய அணிக்கு பட் கம்மின்ஸும் தலைமை தாங்குகின்றனர். இந்தத் தொடர் 2025–27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஆண்டு லோர்ட்ஸில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்தப் போட்டிக்குப் பின்னர் இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கின்றன.
தென்னாபிரிக்க அணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பிய அன்ரிச் நோர்ட்ஜே களமிறங்குகிறார். மேலும், தென்னாபிரிக்கா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான கேஷவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோரையும் அணியில் சேர்த்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியிலும் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேமரூன் கிரீன் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனால் 5ஆம் இலக்கத்தில் கூப்பர் கொனொலி அல்லது நிக் மெடின்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் ஒக்டோபர் 9 முதல் 13 வரை டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஒக்டோபர் 18ஆம் திகதி க்கெபெர்ஹாவில் ஆரம்பமாகும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் ஒக்டோபர் 27ஆம் திகதி கேப் டவுனில் தொடங்கவுள்ளது.
MZM. SHIMAK – EDITOR(SPORTS)



