இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்! 82 ஓட்டங்களால் அபார வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணியின் மாஸ் சாதகத் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 6 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கின. சஹிப்சாதா பர்ஹான் 44 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அதிரடியைச் சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பில் முஹம்மத் இம்ரான் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைச் சிதைத்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரையும் 2–0 எனக் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக மாஸ் சாதகத் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
MZM. SHIMAK – EDITOR(SPORTS)



