நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்துக்கு இலங்கையுடன், குறிப்பாக யாழ்ப்பாணத்துடன், நீண்டகாலத் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் தனது குடும்பப் பின்னணி குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாயார் வட இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
தனது தாயார் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த பின்னர் வெளிநாட்டில் குடியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்துகளில் ஒன்றை பார்வையிடுவதாகவும், அது தனது குடும்பத்தின் கடந்த காலத்துடன் தன்னை இணைக்கும் முக்கியமான நினைவாக இருப்பதாகவும் ஜேசன் கூறியுள்ளார்.
அத்துடன், தான் இயக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கும் முன்னதாக பரிசீலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக படக்குழுவினர் இலங்கைக்கு வந்து பல்வேறு படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்ட போதிலும், இறுதியில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால், அந்நாட்டின் இயற்கை அழகையும் சிறப்புகளையும் தனது திரைப்படத்தின் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்த விரும்புவதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.



