பங்களாதேஷை வீழ்த்தி ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
2026 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா அபாரமாக விளையாடி 40 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றார். ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும், ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதையடுத்து 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
20 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா சிறப்பாக செயல்பட்டு 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, மகளிர் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 10ஆவது முறையாக முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளது.



