இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்கள் 2026 செப்டெம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின் தலைமைத்துவத்துடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
அவருடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பல்துறை சார்ந்த வலுவான இருதரப்பு உறவுகளையும் கொண்டுள்ளன. பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான வலுவான உறவுகளிலும் இந்த கூட்டாண்மை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டத்தில் இந்தியா வழங்கிய உதவியும், 2025ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளியின் பின்னர், முதலாவது உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா செயல்பட்டமையும் இருநாட்டு உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்தன.
இதன் மூலம் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும், ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கையின் மீதான அதன் முக்கியத்துவமும் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன், இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் ‘MAHASAGAR’ — பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் — என்ற தொலைநோக்குப் பார்வையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமான வலுவான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் பல்வேறு துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.



